வீடியோ எடுப்பதற்காக ஓடும் காரில் சீட் பெல்டை கழற்றிய பிரதமர்: தவறை உணர்ந்ததால் மன்னிப்பு கேட்டார்

லண்டன்: ஓடும் காரில் தனது சீட் பெல்ட்டை கழற்றிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இங்கிலாந்து பிரதமரும், இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனக், நேற்று வடமேற்கு இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்ட போது, வீடியோ ஒன்றை எடுக்க முயன்றார். அப்போது அவர் தனது காரின் சீட் பெல்ட்டைக் கழற்றினார்.

இதுதொடர்பான வீடியோ வெளியானது. பொதுவாக இங்கிலாந்து நாட்டு சட்டத்தின்படி, காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியத் தவறினால், அதே இடத்தில் 100 பவுண்டு (ரூ. 10,000) அபராதம் விதிக்கப்படும். இவ்வழக்கு  நீதிமன்றத்திற்குச் சென்றால் 500 பவுண்டு வரை அபராதம் விதிக்கப்படும். இவ்விவகாரம் குறித்து ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘பிரதமர் காரில் சென்று கொண்டிருந்த போது, தனது சீட் பெல்ட்டை கழற்றியது உண்மை. ஒரு வீடியோ கிளிப்பை எடுப்பதற்காக அவர் சீட் பெல்டை கழற்றினார். இது தவறு என்பதை உணர்ந்ததால், மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். காரில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்’ என்று கூறினார்.

Related Stories: