அருப்புக்கோட்டையில் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 72 கடைகளுடன் சிறப்பாக செயல்படும் உழவர் சந்தை

❍ தினசரி 9 டன் காய்கறிகள் விற்பனை

❍ விவசாயிகளுக்கு மின்னணு தராசுகள்

❍ காய்கறிகளை பாதுகாக்க குளிர்பதன கிட்டங்கி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் 72 கடைகளுடன் உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி 9 டன் வரை காய்கறிகள் விற்பனையாவதுடன் விவசாயிகளுக்கு மின்னணு தராசுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் காய்கறிகளை பாதுகாக்க சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிட்டங்கியும் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய அளவில் காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகள், இடைத்தரகர்கள் இல்லாமல் தங்கள் பொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்து வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது உழவர் சந்தை திட்டம். இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 8 உழவர் சந்தைகள் செயல்படுகிறது. அதில் அருப்புக்கோட்டையில் சிறப்பாக செயல்படும் உழவர்சந்தையில் 72 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள தும்முசின்னம்பட்டி, பாலையம்பட்டி, பண்ணைமூன்றடைப்பு, சித்தலக்குண்டு, தமிழ்பாடி, செட்டிக்குறிச்சி, கட்டங்குடி, கல்லூரணி, குருணைக்குளம், ஆத்திபட்டி, அரசகுளம், கீழகண்டமங்கலம், தொட்டியாங்குளம், ஆமணக்குநத்தம், ஆகிய கிராமங்களில் இருந்து விளைவித்த கீரைகள், அனைத்து வகையான காய்கறிகளும், பசுமை மாறாமல் சிலமணி நேரங்களில் இந்த உழவர் சந்தைக்கு வந்து விடுகிறது. ஏழை, எளிய மக்கள் அனைவரும் இங்கு காய்கறிகளை வாங்க வருகின்றனர். ஒவ்வொரு விவசாயிக்கும் எடைக்கற்கள், மேஜை தராசு முன்பு கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது மின்னணு தராசுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 72 கடைகளில், 40க்கு மேற்பட்ட கடைகள் தற்போது தினந்தோறும் செயல்படுகின்றன. இங்கு அரசகுளத்தை சேர்ந்த மகளிர் குழுவினர் மலைப்பகுதிகளில் விளையும் காய்கறிகளான கேரட், பீட்ரூட், காலிப்பிளவர் போன்ற காய்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நகர் பகுதியில் உள்ள பெரும்பாலனோரும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும், தினமும் உழவர்சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக இந்த உழவர் சந்தையில் தினந்தோறும் 9 டன் வரை காய்கறிகள் விற்பனையாகின்றன. இது பண்டிகை காலங்களில் 11 டன் வரை உயர்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு கடைகள் அனைத்தையும் மராமத்து செய்து, விவசாயிகளுக்கு மின்னணு தராசுகளும், விற்பனையாகாமல் மீதமுள்ள காய்கறிகளை கெடாமல் வைப்பதற்காக சூரியஒளியில் இயங்கும் குளிர்பதன கிட்டங்கியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பதற்காக உரம் தயாரிக்கும் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் டிஜிட்டல் மின்னணு மூலம் தினந்தோறும் காய்கறிகளின் விலைகளை தெரிந்து கொள்ள வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் உழவர்சந்தையினை மேம்படுத்தப்பட்ட பணிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இந்த திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்முரம் காட்டியதால் உழவர்சந்தை மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதுகுறித்து அரசகுளத்தை சேர்ந்த விவசாயியான தங்கம்மா என்பவர் கூறும்போது, இந்த சந்தை தொடங்கிய காலத்திலிருந்து வியாபாரம் செய்கிறேன். காய்கறிகளை பறித்தவுடன் இங்கு கொண்டு வந்து விடுகிறோம். தற்போது மலை காய்கறிகளையும் கொண்டு வந்து விற்பனை செய்கிறேன். முன்பு உழவர் சந்தைக்கு வந்து செல்ல உழவர் சந்தை தொடங்கும் நேரத்தில் அதிகாலையில் கிராமங்களில் இருந்து உழவர்சந்தைக்கு நேரடி பஸ் வசதி இருந்தது. தற்போது தும்முசின்னம்பட்டி, தொட்டியாங்குளம் இந்த ஊர்களுக்கு மட்டும் தான் பஸ் வசதி உள்ளது. மற்ற ஊர்களுக்கு இல்லை. எனவே பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

மேலும் உழவர்சந்தை ஆரம்பிக்கும்போது இருந்த கழிப்பறையை இடித்துவிட்டனர். இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். அத்துடன் நகராட்சி மூலம் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் முறையாக தண்ணீர் ஊற்றுவது இல்லை. உழவர் சந்தைக்கு தனியாக குழாய் இணைப்பு அமைக்க வேண்டும் என்றார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மகாலட்சுமி கூறும்போது, தினந்தோறும் காய்கறி விலையை மொத்த வியாபாரிகளிடமும், சில்லறை வியாபாரிகளிடமும் விசாரித்து இவை இரண்டிற்கும் நடுவிலான விலையில் விற்பனை செய்வதற்கு இங்குள்ள விவசாயிகளுக்கு தெரிவிப்போம்.

ஒவ்வொரு விவசாயிக்கும் தற்போது மின்னணு தராசு கொடுத்துள்ளோம். காய்கறி உற்பத்தி குறைவான காலங்களில் மொத்த வியாபாரிகளிடம் வாங்கிவந்து விற்க சொல்கிறோம். அரசு அறிவிக்கும் திட்டங்கள், சலுகைகள் அனைத்தையும் அவர்களுக்கு உடனடியாக தெரிவிக்கிறோம் என்றார்.

Related Stories: