பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் மூத்த தலைவர்களுக்கு கிடுக்கிப்பிடி: தேர்தல் ஜுரத்தால் அறிவுறுத்தல்

புதுடெல்லி: பாஜக தேசிய செயற்குழுவில் மாநில தலைவர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தேவையற்ற கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  டெல்லியில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான வேலைகளை தொடங்க வேண்டும் என்று கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

இரண்டு நாட்களாக நடந்த தேசிய செயற்குழுவில், 2024 மக்களவை தேர்தல், 9 மாநில பேரவை தேர்தல் குறித்தே அதிகமாக விவாதிக்கப்பட்டது. அதற்கடுத்ததாக ஜேபி நட்டாவின் தேசிய தலைவர் பதவியை 2024 ஜூன் வரை நீடித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர்களும், அமைச்சர்களும் பிரதமர் மோடியின் உரையைக் கேட்ட பிறகு, அவர்களுக்கு பெரிய பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில்: இந்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் 9 மாநிலங்களில் அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டு வர வாய்ப்பில்லை. ஆனால் அந்த மாநிலங்களின் நிர்வாகிகளை மாற்றியமைக்க பரிந்துரைகள் வந்துள்ளன. மாநில தலைவர்கள், அமைச்சர்கள், தேசிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் தங்களது தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு தொடங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

பாஜகவின் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் போராட்டங்களை தீவிரமாக நடத்தவும், தேவையற்ற கருத்துகளை மூத்த தலைவர்கள் பொதுவெளியில் தெரிவிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. பேரவை தேர்தல் நடக்காத மாநிலங்களில், மக்களவை தேர்தலுக்கான பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது’ என்று கூறினர்.

Related Stories: