எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதாக கருத வேண்டாம் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் தான்: பாஜ நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி கட்டளை

புதுடெல்லி: ‘வரும் 2024 மக்களை தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள்தான் உள்ளது. இதற்காக கட்சி தொண்டர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும். எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதாக நினைத்து சும்மா இருந்துவிடக் கூடாது’ என பாஜ நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி கட்டளை பிறப்பித்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலும், அதற்கு முன்னோட்டமாக 9 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் இந்த ஆண்டும் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் வியூகங்கள் வகுப்பது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க பாஜ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பங்கேற்று, கட்சி நிர்வாகிகளிடம் பேசியதாவது: பாஜ இப்போது வெறும் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல. சமூக-பொருளாதார நிலைமைகளை மாற்றக் கூடிய ஒரு செயல்திறன் கொண்ட இயக்கம். எனவே, 2024 மக்களவை தேர்தலுக்காக கட்சி தொண்டர்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்க வேண்டும். பூத் அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். மக்களவை தேர்தலை சந்திக்க நமக்கு 400 நாட்கள் எஞ்சியுள்ளன. அதனை மக்களுக்காக அர்ப்பணித்திடுங்கள். மக்களுக்கு சேவை செய்ய என்னென்ன தேவையோ அத்தனையும் செய்ய வேண்டும். நாம் வரலாறு படைக்க வேண்டும். சீக்கியர்கள், போராக்கள், பஸ்மண்டாக்கள் உள்ளிட்ட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் தேர்தல் நோக்கத்திற்காக இல்லாமல் பொதுவாக அணுகுங்கள்.

அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்யுங்கள். குறிப்பாக நாட்டில் எல்லைப் பகுதிகளை இணைக்கும் இடங்களில் கட்சியை மேலும் வலுப்படுத்துங்கள். குறிப்பாக, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்துங்கள். ஏனெனில், நாட்டின் வரலாறு பற்றியும், முந்தைய அரசுகள் என்ன செய்தன என்பது பற்றியும் அவர்களுக்கு தெரியாது. அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி,பாஜவின் நல்லாட்சி குறித்து தெரியப்படுத்துங்கள். எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதாக கருத வேண்டாம். நாட்டின் சிறந்த சகாப்தம் வரப்போகிறது. அதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* நட்டா பதவி நீட்டிப்பு

பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டித்து தேசிய செயற்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நட்டா கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி பாஜ தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது 3 ஆண்டு பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், மக்களைவ தேர்தலை கருத்தில் கொண்டு நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நட்டா பதவிக்காலத்தை நீட்டிக்க பாஜ நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* பிரமாண்ட வெற்றி அமித்ஷா நம்பிக்கை

தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் நட்டா தலைமையின் கீழ் கடந்த 2019 மக்களவை தேர்தலை விட 2024 மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளுடன் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நட்டா தலைமையின் கீழ் பல்வேறு மாநில தேர்தல்களில் பாஜ வென்றுள்ளது. 120 இடைத்தேர்தல்களில் 73 தொகுதிகளை பாஜ கைப்பற்றி உள்ளது’’ என்றார்.

Related Stories: