திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் நிறைவு

திருமலை: திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. மேலும், நாளை மறுதினம் இலவச டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வருகிற 11ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, ₹300 நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான 2 லட்சம் டிக்கெட்டுகளை ஆன்லைனில் தேவஸ்தானம் ஏற்கனவே விநியோகித்தது. இதுதவிர நாளொன்றுக்கு 45 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் என 10 நாட்களுக்கு 4.50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

திருப்பதியில் 9 இடங்களில் கவுன்டர்களில் வழங்கப்பட்டது. அதன்பின்னர் உள்ளூர் பக்தர்களின் வருகை குறைந்ததால் டிக்கெட் கவுன்டர்களை 4ஆக குறைக்கப்பட்டது. ஏழுமலையான் கோயிலில் நாளை வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளை நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். அதன்பின்னர் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் கதவு அடைக்கப்படும். இதனிடையே கடந்த 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுதினம் முதல் வழங்கப்பட உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: