ராஜபாளையத்தில் நாட்டு நாய்கள் கண்காட்சி-சிவகாசி கன்னி வகை நாய் முதலிடம்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நடந்த நாட்டு நாய்கள் கண்காட்சியில், சிவகாசியை சேர்ந்த கன்னி வகை நாய் முதலிடம் பெற்றது.கோவையைச் சேர்ந்த தனியார் அமைப்பு சார்பில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில், நாட்டு இன நாய்களின் கண்காட்சி நடந்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த கன்னி, ராஜபாளையம், கோம்பை, கேரவன் ஹவுண்ட் மற்றும் வெளிமாநில நாய்கள் என 300 நாட்டு நாய்கள் கலந்து கொண்டன. இவற்றின் உடல் அமைப்பு, உயரம், எடை, வேகம், உரிமையாளர்களுக்கு அடி பணிதல் ஆகிய படி நிலைகள் மூலம், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் படேல் என்பவர் நடுவராக இருந்து நாய்களை தேர்வு செய்தார்.

இதில், சிறப்பாக செயல்பட்ட நாய்களில் இருந்து 8 நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில், சிவகாசியைச் சேர்ந்த கன்னி முதலிடம், சிப்பிப்பாறை இரண்டாம் இடம், ராஜபாளையம் மூன்றாம் இடம் பிடித்தன. நாயின் உரிமையாளர்களுக்கு பள்ளிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை ராஜபாளையம் தலைவர் கற்பக செல்வம் செய்திருந்தார்.

Related Stories: