கர்நாடக மாநிலத்திற்கு கடத்திய ரூபாய் 33 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்-போலீஸ் சீருடையில் கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் 2 பேர் கைது

திருமலை : கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற ₹33 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் காருடன் அதிரடிப்படை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் சீருடையில் கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஏர்பேடு, கிருஷ்ணாபுரம், மல்லேமடுகு வழியாக  கரக்கம்பாடி பகுதியில் கர்னூல் சரக  டிஐஜி செந்தில்குமார் தலைமையிலான செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரேணிகுண்டா அடுத்த டி.என்.பாளையம்  அமர் ராஜா தொழிற்சாலை அருகே சிலர் காருடன்  நின்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் சென்று அதிரடிப்படை போலீசார் நீங்கள் யார்?. இங்கு என்ன செய்கிறீர்கள் என்று தெலுங்கிலும், தமிழிலும் விசாரித்துள்ளனர். அப்போது, காரை விட்டு கீழே இறங்கி சிலர் தப்பியோட முயன்றனர். அவர்களில் 2 பேரை ரிசர்வ் சப்-இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா மற்றும் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும், தப்பியோடியவர்களை  தேடிவருகின்றனர்.

இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு செய்ததில் கடத்தலுக்காக கொண்டு வரப்பட்ட 31 செம்மரக்கட்டைகளும், காரும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், காரில் போலீஸ் சீருடையும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பிடிப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினர். கடப்பா மாவட்டம், சாப்பாடு அடுத்த கதர்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஷேக் செம்பட்டி லால் பாஷா(36), அவரின் சகோதரரான ஷேக் செம்பட்டி ஜாகிர்(27) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் செம்மர கடத்தலுக்கு வந்ததும், கடத்தலின் போது  போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் சிக்காமல்  இருப்பதற்காக போலீசார் உடையில் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கடத்தல்காரர்களிடம் இருந்து செம்மரம் கடத்துவதற்கு, இவர்களே போலீசார் சீருடையில், சென்று மடக்கி, பின்னர் வாகனத்துடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துவது போல் நடித்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

இவர்கள் மீது செம்மரக்கடத்தல் மற்றும் கிரிமினல் வழக்குகள் இருப்பதும், ஏற்கனவே சிறைக்கு சென்று வந்து, மீண்டும் கடத்தலில் சர்வதேச கடத்தல்காரர்களுடன் இணைந்து ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ₹33 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து எஸ்பி சக்கரவர்த்தி கூறுகையில், ‘செம்மர கடத்தலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும். அதிகப்பட்ச தண்டனை நீதிமன்றத்தின் மூலம் பெற்று தர அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கடத்தல்காரர்களிடம் இருந்து முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: