தெ.ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆஸி ரன் குவிப்பு: இரட்டைச் சதத்தை நெருங்கிய கவாஜா

சிட்னி: கவாஜா, ஸ்மித் ஆகியோர் சதம் விளாச ஆஸி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 475ரன் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. வெளிச்சமின்மை, மழை காரணமாக முதல் நாளில் குறைந்த ஓவர்களே வீசப்பட்டன. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸி முதல் இன்னிங்சில் 47ஓவரில் 2விக்கெட் இழப்புக்கு 147ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த கவாஜா 51, ஸ்டீவன் ஸ்மித் 0 ரன்னுடன் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர்.

முதல் நாள் போல் இயற்கை சதி செய்யாததால் கவாஜா, ஸ்மித் இணை தெ.ஆ பந்து வீச்சை பதம் பார்த்தது. கவாஜா தனது 13வது டெஸ்ட் சதம் விளாச, ஸ்மித் அரைச் சதத்தை கடந்தார். இருவரையும் பிரிக்க தெ.ஆ வீரர்கள் போராடினர்.

இருவரும் தொடர்நது சிறப்பாக விளையாடினர். இடையில் தனது 30வது டெஸ்ட் சதத்தை விளாசிய ஸ்மித்தை 104 ரன்னில் ஆட்டம் இழந்தார். கவாஜா, ஸ்மித் இருவரும் 3வது விக்கெட்டுக்கு 209ரன் குவித்தனர். அடுத்து வந்த டிராவிஸ் ஹெட்  வழக்கம் போல் அதிரடியாக விளையாட ஸ்கோர் உயர்ந்தது. அவர் 59பந்தில் 70ரன் விளாசி பெவிலியன் திரும்பினார். கொரோனா தொற்றுக்கு ஆளான மேத்யூ ரென்ஷா அடுத்து களமிறங்கினார்.  

இன்னொருப் பக்கம் பொறுப்புடன் விளையாடிக் கொண்டு இருந்த கவாஜா இரட்டைச் சதத்தை நெருங்கிக் கொண்டு இருந்தார். மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பெவிலியன் திரும்பிய வீரர்கள் மழை நிற்கும் என்று காத்திருந்தனர். ஆனால் மழை நிற்காததால் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது ஆஸி 131ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 475ரன் குவித்திருந்தது. அந்த அணியின் கவாஜா 195ரன்னுடனும், ரென்ஷா 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தெ.ஆ தரப்பில் நார்ட்ஜே 2, ரபாடா, கேசவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

* கொரோனா உடன் களத்தில்...

கொரோனா பெருந்தொற்று காரணமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது நின்றுப் போனது. தொற்று குறைந்த பிறகு போட்டிகள் நடத்தப்பட்டாலும், வீரர்களுக்கு அடிக்கடி பரிசோதனை, கண்காணிப்பு வளையம் என ஏக கெடுபிடிகள் தொடர்கின்றன. கூடவே தொற்று உறுதியானால், அந்த வீரரை தனிமைப்படுத்தி, மருத்துவக் கண்காணிப்பில் வைப்பதும்  உலக நடைமுறையாக உள்ளது. மேலும் அவருக்கு பதில் மாற்று வீரர் புதிதாக அணியில் சேர்க்கப்படுவார்.ஆனால் கொரோனா பெருந்தொற்று வரலாற்றில் முதல் முறையாக கொரோனா தொற்று உறுதியான ஆஸி வீரர் மாத்யூ தாமஸ் ரென்ஷா(26) களமிறக்கப்பட்டுள்ளார்.

போட்டி தொடங்குவதற்கு முன்பே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியதால் ரென்ஷாவுக்கு ஆடும் அணியில் இடம் கிடைத்தது. ரென் ஷா களமிறக்கப்பட்டாலும், மற்ற  நேரங்களில் வீரர்களுடன் பழக விடாமல் தனிமையில் வைத்து உள்ளனர். தொற்று உறுதியானாலும், ஆரோக்கியத்துடன் இருப்பதால் களமிறக்கி இருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது. அதற்கு தென் ஆப்ரிக்காவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே இந்த மாற்றம் வருங்காலத்தில் தொடர்கதையாகக் கூடும்.

Related Stories: