இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வரும் நிலையில் அதனை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க விருப்பம் இல்லை என்று ஏற்கனவே டிராவிட் வெளிப்படையாக அறிவித்து விட்டதால் அடுத்த புதிய தலைமை பயிற்சியாளருக்கான தேடலை பிசிசிஐ தீவிரப்படுத்தி உள்ளது.

அந்த வகையில் மே 27ம் தேதி வரை புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில் பல்வேறு முக்கிய நபர்கள் பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பித்தனர். இந்திய முன்னாள் வீரர்களும் பயிற்சியாளர் பதவிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் சில முக்கிய முன்னாள் வீரர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீரிடமும் அடுத்த பயிற்சியாளருக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த பேச்சுவார்த்தையில் கம்பீர் பயிற்சியாளராக செயல்பட சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது

முன்னாள் இந்திய வீரரான கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணிக்காக ஆலோசராக செயல்பட்டு வரும் நிலையில் அந்த அணி 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக லக்னோ அணியின் மென்டராக இருந்தபோது அந்த அணி பிளே ஆப் சுற்றிற்கு நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

The post இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: