கர்நாடகாவில் சூடுபிடித்துள்ள தேர்தல் களம்: பாஜகவுக்கு பதிலடி தருவதில் காங்கிரஸ் தீவிரம்..!

டெல்லி: குஜராத் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப்பை தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற குஜராத் சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இது குறித்து கட்சியின் புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சோனியா காந்தியின் ஆலோசனைப்படி மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் நிதின் ராவத் தலைமையில் 3 பேர் கொண்ட இந்த குழு 2 வாரங்களில் கட்சி தலைமையிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடகாவில் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து துணை தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். வீடு வீடாக சென்று ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், வாக்காளர் பெயர் விடுபடாமல் இருப்பது, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அயோத்யா, கேதார்நாத், காசியை மேம்படுத்திய பிரதமர் மோடியை தேர்வு செய்வதா? அல்லது திப்புவை போற்றுபவர்களா? என்பதை வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், கர்நாடகாவில் பிரதமர் மோடி ஆட்சி செய்தாரா? என்றும், அங்கு பாஜகவுக்கு தலைவர்கள் இல்லையா என்றும்? கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: