கொருக்குப்பேட்டை பகுதியில் போலி குங்குமம், மஞ்சள் தயாரித்த 3 குடோன்களுக்கு அதிகாரிகள் சீல்: 7 டன் ரேஷன் அரிசி, ரசாயனம் பறிமுதல்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில், ரேஷன் அரிசி மூலம் போலி குங்குமம், மஞ்சள் தயாரித்த 3 குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, அங்கிருந்து 7 டன் ரேஷன் அரிசி மற்றும் ரசாயன பவுடரை பறிமுதல் செய்தனர்.

கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 6வது தெருவில் உள்ள ஒரு குடோனில், ரேஷன் அரிசியை கடத்தி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்து, மாவு மிஷினில் அரைத்து, அந்த மாவுடன் ரசாயனம் கலந்து போலியாக மஞ்சள், குங்குமம் தயார் செய்து விற்பனை செய்வதாக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உதவி ஆணையர் நெகமியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில், நேற்று அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, அதிகாரிகளை பார்த்து அங்கிருந்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, அங்குள்ள 3 குடோன்களை சோதனை செய்தபோது, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யபடும் பச்சரிசி, புழுங்கல் அரிசிகளை குறைந்த விலைக்கு, மூட்டை மூட்டையாக கொண்டு வந்து அடுக்கி வைத்து, பின்னர் அரவை இயந்திரம் மூலம் அரைத்து, அதில் ரசாயன கலர் பொடிகளை கலந்து போலியாக குங்குமம், மஞ்சள் மற்றும் கோலமாவு தயார் செய்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து  3 குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, அங்கிருந்து 7 டன் ரேஷன் அரிசி மற்றும் ரசாயன பவுடரை பறிமுதல் செய்தனர். சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கிராம பகுதிகளிலும் சிறு, சிறு கடைகள் முதல் நாட்டு மருந்து கடைகள் வரை கலர், கலராக குங்குமம் மற்றும் கோலமாவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் சரும நோய்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட எந்த வகையான ரசாயன பவுடர்கள் கலக்கப்படுகிறது என்பதை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தலைமறைவான கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: