மேட்டுப்பாளையம் அருகே வீட்டிற்குள் புகுந்த 4 காட்டு யானைகள்: சிசிடிவி காட்சி வைரல்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை அடர் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த 4 யானைகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளிச்சிகவுண்டனூர் பகுதியில் கருப்பராயர் கோயிலின் கேட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை நாசம் செய்தன. இதேபோல் கட்டாஞ்சி மலைப்பகுதியில் உள்ள தண்டிகை பெருமாள் கோயிலின் கேட்டை உடைத்த காட்டு யானை கும்பல் அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக வைத்திருந்த அரிசியை தின்று நாசம் செய்தன. நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (30) என்பவரது தோட்டத்து வீட்டில் இரு குட்டிகள் உட்பட 4 யானைகள் நுழைந்தன. வீட்டின் முன் நிறுத்திய பைக்கை தள்ளிவிட்டன. வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மாடுகளுக்கு தீவனத்திற்காக வைத்திருந்த சோள மாவு மூட்டையை கீழே தள்ளி ருசி பார்த்துச்சென்றுள்ளன. இந்த காட்சிகள் அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories: