கூடலூரில் பரபரப்பு; கறிக்கோழி வாகனத்தை மறித்து முட்டித்தள்ளிய காட்டுயானை: தப்பிஓடி உயிர் பிழைத்த டிரைவர், உதவியாளர்

கூடலூர்: கூடலூரில் கறிக்கோழி வாகனத்தை காட்டு யானை வழிமறித்து முட்டிதள்ளியது. வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்ததால் டிரைவர், அவரது உதவியாளர் உயிர்தப்பினர். நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி 15வது வார்டில் எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்குள்ள முனீஸ்வரன் கோயிலை ஒட்டியுள்ள தனியார் தோட்டம் வழியாக நேற்று காலை கூடலூர்- கள்ளிக்கோட்டை நெடுஞ்சாலைக்கு ஒற்றை காட்டு யானை வந்தது. இங்குள்ள பள்ளி வரை சுமார் 300 மீட்டர் நடந்தது. அப்போது கறிக்கோழி ஏற்றிய வாகனம் வந்தது. யானை வருவதை பார்த்த டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

அங்கு வேகமாக வந்த யானை வாகனத்தை முட்டித்தள்ளியது. வாகனத்தில் இருந்த டிரைவரின் உதவியாளரும் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பிஓடி உயிர்பிழைத்தார். பின்னர் யானை நெடுஞ்சாலையில் நடந்து சென்றது. யானை வருவதை பார்த்த எதிரே வந்த வாகன ஓட்டிகள் வாகனத்தை திருப்பிச்சென்றனர். டீக்கடை, மளிகை மற்றும் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பதுங்கிக்கொண்டனர். சிறிதுநேரம் அந்த பகுதியில் உலாவிய காட்டுயானை, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. அதிகாலை நேரத்தில் காட்டு யானை ஊருக்குள் புகுந்த சம்பவம் கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: