சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்க சலங்கைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். பொங்கல் என்றதும் நம் நினைவுக்கு வருவது தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆகும். ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்கவும், அவற்றின் கம்பீரத்தை பிரதிபலிப்பதிலும் சலங்கைகள் முக்கியமானதாக உள்ளது. காளை வளர்ப்போர் அவர்களது விருப்பப்படி பல்வேறு வகையான ஜல்லிக்கட்டு சலங்கைகளை வாங்கி தங்களது வளர்ப்பு மாடுகளுக்கு அணிந்து அழகு பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் சலங்கைகள் புகழ் பெற்றவை. இதனால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடு வளர்ப்பவர்கள் அதிக அளவில் சலங்கைகளை தயாரிக்க இங்கு வந்து ஆர்டர்கள் கொடுக்கின்றனர். இந்த பகுதியில் டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சலங்கை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறும். இங்கு சலங்கைகள் வெங்கல மணி, பித்தளை மணி மற்றும் சில்வர் ஆகியவற்றால் 4 பல், 6 பல், 8 பல் என்ற அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.
அதேபோல் நாக்கு மணி, வாழைக்காய் மணி என பல்வேறு வகையான மணிகளை தோல் பெல்ட்டுகளில் அழகாக கோர்த்து குஞ்சங்கள் வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இந்த குஞ்சங்கள் பல்வேறு வடிவங்களில் மாடு வளர்ப்போரின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு கலர்களில் செய்யப்பட்டு மணிகளுடன் கோர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய கன்றுகளுக்கு ஆறு மணியும், பெரிய மாடுகளுக்கு 12 மணிகள் வரை கோர்க்கப்பட்டு ரூ.1,800 முதல் ரூ.8,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. சலங்கை தயாரிப்பாளர் மூர்த்தி கூறும்போது, ‘‘சிங்கம்புணரியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சலங்கைகள் தயாரிக்கும் பணியில் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகிறோம். டிசம்பர் முதல் ஜூன் மாதம் வரை சலங்கைகள் செய்வதற்கு ஆர்டர்கள் அதிக அளவில் வருகிறது. கோயில் மாடுகள், வீட்டில் வளர்க்கப்படும் மாடுகள் ஆகியவற்றிற்கு கலை நயத்துடன் சலங்கைகள் செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடு வளர்ப்பவர்கள் ஆர்வத்துடன் புது சலங்கைகள் வாங்கவும், பழைய சலங்கைகளில் உள்ள மணிகளை புதுப்பிக்கவும் இங்கு வருகின்றனர்’’ என்றார்.