கூடலூரில் பரபரப்பு; டயர் வெடித்து காஸ் சிலிண்டர் லாரியில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு

கூடலூர்: கூடலூரில் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து தீ பிடித்ததால் பரபர ப்பு ஏற்பட்டது.  நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள இன்டேன் காஸ் குடோனுக்கு கோவையிலிருந்து  எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் பின்புற சக்கரம் திடீரென வெடித்து தீப்பிடித்தது. லாரி டிரைவர் சாமார்த்தியமாக லாரியை ஓரமாக நிறுத்தினார். கூடலூர் நகர் ராஜகோபாலபுரம் பகுதியில் இன்று காலை இச்சம்பவம் நடந்துள்ளது.  

இதைபார்த்த மற்ற வாகன ஓட்டுனர்கள்  மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக அப்பகுதியில் வாகன போக்குவரத்தை நிறுத்தி லாரி டயரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும், லாரியின் அருகில் பொது மக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனை அடுத்து மாற்று டயர் பொருத்தப்பட்டு சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு லாரியை ஓட்டுனர் அங்கிருந்து ஓட்டிச் சென்றார்.

எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி குடோன் சென்றடைய 2 கி.மீ தூரத்தில் நகருக்குள்  குடியிருப்புகள், கடைகள் நிறைந்த பகுதியில் டயர் வெடித்து விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related Stories: