பவுன்சர்கள் தாக்குதல் செய்தியாளர்களிடம் ஜெனிலியா மன்னிப்பு

கோலாப்பூர், : பவுன்சர்கள் தாக்கிய சம்பவத்தில் செய்தியாளர்களிடம் நடிகை ஜெனிலியா மன்னிப்பு கேட்டார். ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக், மராத்தியில் வேத் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அவரும் ஜெனிலியாவும் சேர்ந்து நடித்துள்ளனர். வரும் 30ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி சிறப்பு பூஜை செய்ய மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர் பஞ்சகங்காவில் அமைந்துள்ள மகாலட்சுமி கோயிலுக்கு தம்பதி சென்றனர். ஜெனிலியா வந்திருப்பதை அறிந்து, செய்தியாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் அங்கு கூடிவிட்டனர். கோயிலுக்குள் செல்ல முடியாதபடி ஜெனிலியாவின் பவுன்சர்கள் செய்தியாளர்களை தடுத்தனர்.

இதில் பவுன்சர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பவுன்சர்கள் செய்தியாளர்களை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜெனிலியா கூறும்போது, ‘நானும் ரித்தேஷும் கோயிலுக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. வேத் படம் திரைக்கு வருவதால் சாமியை தரிசிக்க வந்தோம். அதற்குள் இப்படியொரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. செய்தியாளர்களையும் போட்டோகிராபர்களையும் நாங்கள் அழைக்கவில்லை. அவர்கள் எப்படி வந்தார்கள் என தெரியவில்லை. ஆனாலும் பவுன்சர்கள் நடந்த விதத்திற்காக செய்தியாளர்களிடம் நானும் ரித்தேஷும் மன்னிப்பு கேட்கிறோம்’ என்றார்.

Related Stories: