குமரி முழுவதும் விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகளுடன் கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம்- தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

நாகர்கோவில் : குமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் நடந்த சிறப்பு திருப்பலி, ஆராதனை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25ம்தேதி, கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று (25ம்தேதி) கிறிஸ்துமஸ் பண்டிகை  கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கிறிஸ்துமசையொட்டி, நேற்று முன் தினம் நள்ளிரவில் ஆர்.சி. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு ஆராதனை, திருப்பலியில் பிஷப் நசேரன் சூசை பங்கேற்றார். சிறப்பு ஆராதனை முடிந்ததும், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் ெகாண்டனர். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். குழித்துறை மூவொரு இறைவன் தேவாலயத்திலும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதனை போன்று சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் நேற்று அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா நெய்யூர் நெல்லறைக்கோணம் சபையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்து கொண்டார். மத்திக்கோடு சி.எஸ்.ஐ. ஆலயம், பரைக்கல்விளை சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையிலும் பேராயர் செல்லையா பங்கேற்றார்.

சீரோ மலபார், பெந்தெகொஸ்தே, இரட்சண்ய சேனை உட்பட பல்வேறு பிரிவுகளுக்குட்பட்ட தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  

நாகர்கோவில், தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, கொல்லங்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தன. புத்தாடைகள் அணிந்து தேவாலயங்களில் மக்கள் திரண்டனர். கடலோர கிராமங்களில் கால்பந்து போட்டிகள் உள்பட விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஆடல், பாடல் நிகழ்ச்சிகளிலும்  சிறுவர்கள், சிறுமிகள் பங்கேற்று, நடனமாடி மகிழ்ந்தனர்.

கிறிஸ்துமசையொட்டி கடந்த 15 நாட்களாகவே மாவட்டம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டின.  வீதிகள் தோறும் கேரல் நிகழ்ச்சிகளும், கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலங்களும்  நடைபெற்றன. வீடுகளிலும், தேவாலயங்களில் பிரமாண்ட குடில்கள்  அமைக்கப்பட்டன. வண்ண, வண்ண ஸ்டார்கள் தொங்க விடப்பட்டன. மின் விளக்கு  அலங்காரங்களும் செய்யப்பட்டு இருந்தன. தேவாலயங்கள் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தன.

கிறிஸ்துமஸ் குடில்களை பார்க்க பொதுமக்களும் ஆர்வமுடன் திரண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கடலோர பகுதிகளில் சிறப்பு ரோந்து படைகள் கண்காணித்தனர். சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, குமரி மாவட்டத்துக்கு நேற்று முன் தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: