மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் மேலாளர் திஷா சாலியன் போதையில் விழுந்து இறந்தாரா? சிபிஐ அறிக்கையால் பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கில் அவர் போதையில் விழுந்து இறந்ததாக சிபிஐ கூறியதாக வெளியான செய்தியை, சிபிஐ மறுத்து அறிக்கை வெளியிட்டதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மேலாளராக இருந்த திஷா சாலியன் (28)  என்பவர், மும்பையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி இரவு பிறந்த நாள்  கொண்டாடினார். அப்போது நண்பர்களுக்கு மதுவிருந்து அளிக்கப்பட்டது.  எல்லோரும் ஜாலியாக கொண்டாட்டத்தில் இருந்தனர். விருந்து முடிந்ததும்,  அன்றிரவு வீட்டின் 14வது மாடியின் பால்கனியில் நின்றிருந்த திஷா சாலியன்,  அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து ஜூன் 14ம் தேதி  நடிகர் சுஷாந்த் சிங் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  

திஷா சாலியனின் மரணம் விபத்து அல்ல; கொலை என்றும், அதேபோல் சுஷாந்தின்  மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. சுஷாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பாலிவுட் மற்றுமின்றி மகாராஷ்டிரா அரசியலிலும் பெரும் விவாதப் பொருளாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் திஷா சாலியன் மரணம் குறித்து சிறப்பு விசாரணை குழுவிற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது. இவ்வழக்கு தொடர்பாக ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால், அதனை சம்பந்தப்பட்டவர்கள் சிறப்பு விசாரணை குழுவிடம் சமர்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மாநில அரசின் அறிவிப்பை தொடர்ந்து, மாநில சட்டப் பேரவையிலும் இப்பிரச்னை எழுப்பப்பட்டது. அப்போது ஒன்றிய பாஜக அமைச்சர் நாராயணன் ரானேவின் மகனான எம்எல்ஏ நிதேஷ் ரானே, ‘அப்போதைய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தாக்கரேவுக்கு உண்மை கண்டறியும் (நார்கோ) சோதனை நடத்த வேண்டும். இவ்வழக்கில் அவருக்கும் தொடர்பு உள்ளது’ என்று கோரினார்.

முன்னதாக சுஷாந்த் மரண வழக்கில் அவரது காதலி ரியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் போதை பொருள் சப்ளை கும்பலுக்கும் தொடர்பு இருந்ததால், பலர் கைது செய்யப்பட்டனர். செல்போனில் பேசியவர்களில் பட்டியலில்  ஆதித்யா தாக்கரேவின் ெபயரும் கூறப்பட்டது. இந்நிலையில் திஷா சாலியன் கொலை செய்யப்படவில்லை என்றும், போதையில் இருந்த அவர் கட்டிடத்தில் இருந்து கீழே தவறி விழுந்ததால் இறந்தார் என்று சிபிஐ-யின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சிபிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘திஷா சாலியன் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கவில்லை. இவ்வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை. இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் தவறானவை’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: