ஞானவாபி விவகாரம் போலவே மதுரா மசூதியில் ஆய்வு நடத்த உ.பி. நீதிமன்றம் அதிரடி உத்தரவு: இந்து அமைப்புகள் வழக்கில் நடவடிக்கை

மதுரா: ஞானவாபி விவகாரத்தை போலவே மதுரா மசூதியிலும் தொல்லியல் ஆய்வு நடத்த உத்தரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி, கடந்த 1699-70ம் ஆண்டில் முகாலய அரசர் அவுரங்கசீப் உத்தரவின் பேரில், கிருஷ்ணர் பிறந்த இடத்தில் உள்ள கோயிலை இடித்து கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. எனவே, 1968ம் ஆண்டு கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சங்கத்திற்கும், ஷாஹி இத்காவுக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தம் சட்ட விரோதமானது என்றும் அதை ரத்து செய்து, மசூதி நிலத்தை கோயிலுக்கு தர வேண்டுமென இந்து அமைப்புகள் உத்தரப்பிரேதச மாநில சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கடந்த 2020ல் இந்த மனுவை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உபி மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை ஏற்றுக் கொண்டு சிவில் நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, உபி சிவில் நீதிமன்றத்தில் மனு விசாரிக்கப்படுகிறது.  இந்நிலையில், வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வு வரும் ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட உள்ளது. ஜனவரி 20ம் தேதிக்குள் தொல்லியல் துறை ஆய்வு முடிவை நீதிமன்றத்தில் சமர்பிக்கும்.

அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், உபியின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி இதே போன்ற தொல்லியல் ஆய்வு நடைபெற்றது. அப்போது மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரா மசூதியிலும் ஆய்வு நடத்தப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

*கிருஷ்ணர் பிறந்த இடமாக கூறப்படும் 13.37 ஏக்கர் பகுதி கத்ரா கேசவ் தேவ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது. வழிபாட்டு இடங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991ன்படி, எந்த ஒரு வழிபாட்டுத்தலமும் 1947 ஆகஸ்ட் 15 அன்று இருந்த அதே வடிவத்திலேயே தொடர்ந்து இருக்கும் என்பதன் அடிப்படையில் இந்த வழக்கை முதலில் சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: