‘நம்ம ஸ்கூல் - நம்ம ஊர் பள்ளி’ திட்டம் குறித்து எடப்பாடி பொய்யான அறிக்கை விடுவது துரதிர்ஷ்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கண்டனம்

சென்னை: ‘நம்ம ஸ்கூல் - நம்ம ஊர் பள்ளி’ திட்டம் குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் சொல்லும் வதந்திகளை நம்பி, ஒரு எதிர்க்கட்சி தலைவர் அடிப்படை ஆதாரமற்ற பொய் மூட்டைகளை அறிக்கையாக விடுவது துரதிர்ஷ்டவசமானது என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் உள்ள பல தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை, தவறாக முன்வைக்கப்பட்டுள்ளவை - ஏன் போலியானவை. எல்லாவற்றையும் விட, அவரது அறிக்கையானது அரசு பள்ளிகளை தரம் உயர்த்தவும், அரசு பள்ளி மாணவ - மாணவிகளின் கல்வி தரத்தை வலுப்படுத்தவும் திமுக அரசு கொண்டுள்ள தெளிவான உயரிய நோக்கத்தை கொச்சைப்படுத்துவதாகும்.

எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு, இதோ துறை அமைச்சர் என்ற முறையில் எனது பதில்கள். முந்தைய அரசு சி.எஸ்.ஆர். பங்களிப்புகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்காக ஓர் இணைய தளத்தை உருவாக்கியதா? முந்தைய அரசால் 2019ம் ஆண்டு முதல் சி.எஸ்.ஆர். நிதிகள் பெறப்பட்டுள்ளன. எனினும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வழிமுறை அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, மாற்றுத் திட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு இருந்தது. பள்ளி கல்வி துறையிலும் நிதி துறையிலும் உள்ள மூத்த அதிகாரிகளை இயக்குநர்களாக கொண்ட ஒரு குழுவால் இத்திட்டம் நிர்வகிக்கப்பட உள்ளது. தனியார் துறையை சேர்ந்த ஒருவர் இத்திட்டத்தின் கவுரவ தலைவராக இருப்பார்.

ஒவ்வொரு பள்ளிக்கும் என்னென்ன தேவை என்பதை அந்தந்த பள்ளியை சார்ந்த பள்ளி மேலாண்மை குழுக்கள் கண்டறிந்து அவற்றை நிறைவேற்ற தேவைப்படும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக அனுப்பி வைக்கவுள்ளன. அதிமுக அரசு ரூ.84 கோடி வரை நிதியுதவியை பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் தனது அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையா? 2017ல் தொடங்கியதாக கூறுகிறார் எதிர்க்கட்சி தலைவர். ஆனால் 18.09.2019 முதல் 22.04.2021 வரையிலான காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட ஒட்டுமொத்த நிதி, வட்டியுடன் சேர்த்து, ரூ.9,78,416 மட்டுமே. எனவே ரூ.84 கோடி நிதி சேர்ந்தாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. அப்பட்டமான பொய்.

நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி தொடக்க விழாவிற்காக ரூ.3 கோடி செலவு செய்யப்பட்டதா? ஓராண்டு முழுவதற்கும் மாவட்ட ஆட்சியர்கள் நிறுவனங்களுடன் நடத்தவிருக்கும் கூட்டங்களுக்காகவும், ஊடகங்களில் செய்தியை கொண்டு சேர்ப்பதற்காகவும், விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காகவும், இத்திட்டத்தில் பங்களிப்பவர்களை ஒன்றுசேர்க்கவும், திட்டம் குறித்த ஒலித்துண்டுகளையும் காணொலிகளையும் உருவாக்குவதற்கும், பரப்புரைக்காகவும், தொடக்க விழாவுக்கு முன்பே நடந்த திட்டமிடல் கூட்டங்களுக்கும், தொடக்க விழாவுக்காகவும் சேர்த்து இந்த 3 கோடி ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆகவே ஒரே நாளில் ரூ.3 கோடி செலவு என்பது அரைவேக்காட்டு தகவல். தொடக்க விழா நடந்த டிசம்பர் 19ம் தேதி மட்டும் 50.84 கோடி ரூபாய், அங்கு வருகை தந்திருந்த பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்களித்ததன் வழியாக ஒரே நாளில் திரட்டப்பட்டது. எனவே எதிர்க்கட்சி தலைவர் என்பதற்காக அடிப்படை ஆதாரமற்ற, அபாண்டமான பொய் மூட்டைகளை அறிக்கையாக விடுவது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: