கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: உளவுத்துறை ஐஜியாக கோவையை சேர்ந்த பிரகாஷ் நியமனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உளவுத்துறை ஐஜியாக கோவையை சேர்ந்த டி.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் எஸ்.பி முதல் ஏடிஜிபி வரை ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனராக இருந்த ஸ்பர்ஜன் குமார் தென்பிராந்திய ஐஜியாக மாற்றப்பட்டார்.  இந்தப் பதவியில் இருந்த டி. பிரகாஷ் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 2004ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வான இவர் கோவையைச் சேர்ந்தவர் ஆவார். கொச்சி நகர கமிஷனராக இருந்த எச். நாகராஜு திருவனந்தபுரம் நகர கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

இவருக்குப் பதிலாக கொச்சி கமிஷனராக சேதுராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இடுக்கி மாவட்டத்தில் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளி மகன் ஆவார். இவரது பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். கேரள போலீஸ் கட்டுமானப் பிரிவு இயக்குனராக இருந்த ஆர். இளங்கோ தொழில்நுட்ப நுண்ணறிவுத்துறை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வான இவரது சொந்த ஊர் சென்னையை அடுத்த குதம்பாக்கம் ஆகும். மேலும் 5 ஐஜிக்களுக்கு ஏடிஜிபியாகவும், 2 டிஐஜிக்களுக்கு ஐஜியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: