கிறிஸ்துமஸ், தொடர் பண்டிகை வருவதால் நாடாளுமன்றம் முன்கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்புமக்களவை 97% செயல்பட்டது; 7 மசோதாக்கள் நிறைவேற்றம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 29ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் பண்டிகைகள் ெதாடர்ந்து வருவதால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என எம்பிக்கள் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, திட்டமிட்டதைவிட ஒரு வாரம் முன்னதாகவே இன்று (டிச. 23) மக்களவையை அவைத் தலைவர் ஓம் பிர்லா, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எம்பிக்களின் கோரிக்கையினாலும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியாலும் கூட்டத்தொடர் முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுகிறது’ என்றார்.

அதேபோல் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இன்று 13வது நாளாக நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தொடங்கும் முன், மின்சார துறை தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து, இடதுசாரி எம்பிக்கள் நாடாளுமன்ற  வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலங்களவை  எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘பொதுக் கூட்டத்தில்  அல்லது எனது அலுவலகத்தில் பேசிய விஷயங்களை, அவையில் சில உறுப்பினர்கள் கிளப்பினர். இதனை அவைத் தலைவர் கவனத்தில் கொள்ளக்கூடாது. எனவே நான் கூறிய விஷயங்களை அவையில் இருந்து  நீக்க வேண்டும்; அல்லது திரும்பப் பெற வேண்டும்’ என்றார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பொது முக்கியத்துவம் வாய்ந்த 374 பிரச்னைகள் குறித்து எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். அவற்றில் 56 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் தரப்பில் 23 பதில்கள் அளிக்கப்பட்டன. மக்களவையை பொருத்தமட்டில் 9 மசோதாக்கள் ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டன. மொத்தம் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களவையானது 68 மணி நேரம் 42 நிமிடங்கள் செயல்பட்டது. நடப்பு கூட்டத்தொடரின் செயல்திறன் சுமார் 97 சதவீதமாக இருந்ததாக மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: