செக்கானூரணி அருகே கிபி 9ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டெடுப்பு

திருமங்கலம் : செக்கானூரணி அருகே கருப்பாசாமி கோயில் ஊரணி கரையில் கிபி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை தனியார் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், கள ஆய்வாளருமான டாக்டர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி அஸ்வத்தாமன், ஆய்வாளர் அனந்த குமரன் ஆகியோர் திருமங்கலம்-சோழவந்தான் ரோட்டில் செக்கானூரணி அடுத்த பன்னியான் மலை கணவாய் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். பன்னியான் கணவாய் கருப்பசாமி கோயில் எதிரேயுள்ள ஊரணி கரையில் கிபி 9ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து உதவி பேராசிரியர் முனீஸ்வரன் கூறுகையில், ‘‘ பழங்காலத்தில் தமிழர்களின் வழிபாட்டு முறை இயற்கை அடிப்படையை கொண்டிருந்தது. அதன்பிறகு நீர், நெருப்பு, காற்று உள்ளிட்ட பஞ்சபூதங்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை வழிபாடு பொருள்களாக பாவித்தனர். இதன் தொடர்ச்சியாக வளமையின் குறியீடாகப் பெண்ணை வழிபடும் மரபு தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த் அடையாளங்களில் ஒன்றாக இடம் பெற்றது. கொற்றவை பற்றி தொல்காப்பியத்திலும், பண்டைய இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொற்றையின் உருவ அமைப்பையும், வழிபாட்டு முறையையும் விவரிப்பது சிலப்பதிகாரமாகும்.

தற்போது கண்டெடுக்கப்பட்ட கொற்றவை சிலை 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் 4 கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக காட்சியளிக்கிறது. கொற்றவை தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க, வட்டவடிவிலான முகம் தேய்மானத்தோடு காணப்படுகிறது. இரு காதுகளிலும் பத்ர குண்டலங்கள் கழுத்தில் ஆரம் போன்ற அணிகலன், கைகளில் கைவளைகள் அணிந்து நின்றவாறு கொற்றவை சிலை காட்சிதருகிறது. கீழ் தளம் மண்ணில் புதைந்துள்ளது.

தன் கரங்களில் சக்கரம், சங்கு, ஏந்தியும், வலது கரத்தில் அபய முத்திரையும் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கைகள் கொண்டு இருப்பதால் சதுர்புஜ துர்க்கை எனவும் அழைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் பள்ளிமடத்தில் இச்சிலையை போன்று கொற்றவை சிற்பம் உள்ளது. இது இரண்டாம் வரகுண பாண்டியர் காலத்தினை சேர்ந்தது. கொற்றவை உருவ ஒற்றுமையை கொண்டு கி பி 9ம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்கள் காலத்தை சேர்ததாக இருக்கும்.’’ என்றார்.

Related Stories: