பூஜை அறையில் விளக்கு ஏற்றியபோது நடிகை கனகா வீட்டில் தீ விபத்து

சென்னை: பூஜை அறையில் விளக்கு ஏற்றும்போது நடிகை கனகா வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 1வது மெயின் ரோடு மற்றும் சூர்யா தெரு சந்திப்பு அருகே பிரபல நடிகை கனகா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், தற்போது சினிமா வாய்ப்புகள் இன்றி வீட்டிலேயே உள்ளார். அதேநேரம், நேற்று வியாழக்கிழமை என்பதால் வீட்டில் உள்ள பூஜை அறையில் மதியம் சாய்பாபாவுக்கு விளக்கு ஏற்றியுள்ளார். சிறிது நேரத்தில் பூஜை அறையில் இருந்த துணியில் தீ பிடித்து கரும் புகை வெளியேறியது.

இதை கவனித்த அருகில் வசிப்பவர்கள் சம்பவம் குறித்து உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நடிகை கனகா வீட்டிற்குள் சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் நடிகை கனகா,‘ வீட்டிற்குள் யாரும் வரக்கூடாது என்று’ தீயணைப்பு வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பிறகு ஒரு வழியாக, தீயணைப்பு வீரர்கள் நடிகை கனகாவை சமாதானம் செய்துவிட்டு உள்ளே சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நடிகை கனகாவின் பூஜை அறையில் இருந்த அனைத்து பொருட்கள் எரிந்து நாசமானது. வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் நடிகைக்கு காயம் ஏற்படவில்லை. இது குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: