கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட இருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் காவல்துறை இயக்குநர் அபாஷ்குமார் உத்தரவின்படி, எஸ்பி. கீதா மேற்பார்வையில், டிஎஸ்பி நாகராஜன் வழிகாட்டுதலின்படி,

திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் கும்மிடிப்பூண்டி ரயில்வே இன்ஸ்பெக்டர் சந்தீப் ஆகியோருடன் இணைந்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது ரயில் நிலையம் அருகே சுமார் 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் 3.5 டன் எடை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: