87 இடத்திற்கு 405 பேர் போட்டி; கொச்சியில் நாளை ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம்: பென் ஸ்டோக்ஸ், சாம்கரண், கேமரூன் கிரீன், ஜெகதீசன் மீது எதிர்பார்ப்பு

கொச்சி: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில் 30 வெளிநாட்டு வீரர்கள் அடங்கும். வீரர்கள் தேர்வுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நாளை நடக்கிறது. இதற்காக கொச்சி போல்காட்டி தீவில் உள்ள கிராண்ட் ஹயாட்டின் இரண்டு தளங்களை பிசிசிஐ முன்பதிவு செய்துள்ளது. நாளை மதியம் 2.30 மணிக்கு தொடங்கி ஒருமணி நேர இடைவேளையுடன் சுமார் 7 மணி நேரம் ஏலம் நடைபெற உள்ளது. ஏல பட்டியலில் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 273 பேர் இந்திய வீரர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

ஏலத்தில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்கள் கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ரிலீ ரோசவ், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம்கரன், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜேசன் ராய், வெஸ்ட்இண்டீசின் நிகோலஸ் பூரன் உள்பட 19 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகும். ரூ.2 கோடியில் இருந்து இவர்களின் ஏலத்தொகை தொடங்கும்.

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா உள்பட 11 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1.50 கோடியாகவும், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட், இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே உள்பட 20 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இஷாந்த் ஷர்மா, ரஹானே, ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரின் தொடக்க விலை ரூ.50 லட்சமாகும்.

ஏலத்தில், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம்கரண் ஆகியோரை ஏலம் எடுக்க கடும் போட்டி இருக்கும். ரஞ்சி போட்டியில் தொடர்ந்து 5 சதம் விளாசிய தமிழக வீரர் ஜெகதீசன் நாராயணன் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. அதிகபட்சமாக ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடம் ஏல கையிருப்பு தொகை ரூ.42¼ கோடி உள்ளது. இந்த அணி 13 வீரர்களை ஏலம் எடுக்க வேண்டி உள்ளது. ஏல நிகழ்வு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Related Stories: