சபரிமலை சீசனையொட்டி ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் குளிக்க கவியருவியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த கவியருவியில் குளிப்பதற்காக சபரிமலை சீசனையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு உள்ளூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்தும் திருப்பூர்,ஈரோடு,திண்டுக்கல்,பழனி,கேரளா உள்பட வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும்.

ஆழியாருக்கு வரும் பயணிகள் அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு பின், பூங்காவில் சென்று குடும்பத்துடன் பொழுதை கழிப்பதுடன், அருகே வனத்துறை கட்டுபாட்டில் உள்ள கவியருவிக்கும் சென்று வருகின்றனர். இதில் வடகிழக்கு பருவமழை சில நாட்கள் தொடர்ந்திருந்த போது, அந்நேரத்தில் கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. தற்போது, மழை குறைந்து தண்ணீர் ரம்மியமாக கொட்டுவதால் கவியருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகமானது.

அதிலும்,  சபரிமலை சீசன் என்பதால், அங்கு ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமானது. கடந்த சிலநாட்களாக, வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளது. இருப்பினும், ஆங்காங்கே வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: