என்ஐஏ அதிகாரிகளாக நடித்து திருடிய வழக்கில் கொள்ளையர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி பணம் பறிமுதல்: ஹவாலா பணமா என விசாரணை

சென்னை: என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று கூறி கொள்ளை அடித்தவர்களிடம் இருந்து 1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஹவாலா பணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகியிருந்த நபரும் நேற்று கைது செய்யப்பட்டார். சென்னை பிராட்வே மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ஜமால். இவர் சகோதரர்களுடன் சென்னை பர்மா பஜாரில் வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி காலை ஜமாலின் வீட்டிற்கு நான்கு பேர் கொண்ட கும்பல் சென்று, தங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்றும், கோவை குண்டுவெடிப்பு காரணமாக உங்களது வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ரூ.10 லட்சத்தையும் கடையில் சோதனை நடத்தி ரூ.10 லட்சத்தையும் பறித்துச் சென்றதாக கூறப்பட்டது.

இதுதொடர்பாக அப்துல் ஜமால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனிப்படை அமைத்து  தேடிவந்த நிலையில், இந்த விவகாரத்தில், மண்ணடியை  சேர்ந்த பா.ஜ. நிர்வாகியான வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச்  சேர்ந்த காஸ் டெலிவரி பாயாக பணியாற்றி வரும் புஷ்பராஜ், விஜயகுமார், பல்லவன் சாலைப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ் மற்றும் ரவி ஆகிய 6 பேர் கடந்த 2நாட்களுக்கு முன்பு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதற்கிடையில் கொள்ளையர்கள் முதலில் ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றதாக தகவல் வெளியான நிலையில், ரூ.2 கோடி கொள்ளை போனதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்ற காவலில் இருந்த 6 பேரிடமும் விசாரணை செய்ய, முத்தியால் பேட்டை போலீசார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். 6 நாள் விசாரித்துக் கொள்ள சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அவர்களிடம் விசாரணை நடத்தி  கொள்ளையர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 47 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஆறு பேரிடம் முத்தியால்பேட்டை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றபட்ட  பணம் ஹவாலா பணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாகியிருந்த மண்ணடி பகுதியை சேர்ந்த முகம்மது பைசல் (36) என்பவரை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: