நாடாளுமன்றம் முதல் சட்டமன்றம் வரை பஞ்சாப் முதல்வரும், மதுபோதையும்..! பெண் எம்பி பேச்சை கேட்டு சிரித்த அமித் ஷா

புதுடெல்லி: பஞ்சாப் முதல்வரின் போதை பழக்கம் குறித்து பெண் எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதலின் பேச்சைக் கேட்டு அமித் ஷா உள்ளிட்ட உறுப்பினர்கள் அவையில் சிரித்தனர். நாடாளுமன்ற மக்களவையில் சிரோன்மணி அகாலி தளம் எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேசுகையில், ‘பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எம்பியாக இருந்த காலத்தில், அவையின் மூலையில் உள்ள சீட்டில் அமர்ந்திருப்பார். அவையில் உள்ள உறுப்பினர்களுக்கு எதற்காக ஓரமாக உள்ள இருக்கையில் அமர்ந்திருக்கிறார் என்பது தெரியும். காரணம் அவர் மது அருந்திவிட்டு வருவார். அவரது அருகில் மற்ற உறுப்பினர்கள் அமரமாட்டார்கள். ஒதுக்கப்பட்ட இருக்கையை விட்டுவிட்டு, வேறு இருக்கைக்கு சென்று அமர்வார்கள். குடிபோதையில் நாடாளுமன்றத்திற்கு வந்த அவர், இன்று பஞ்சாப்பில் ஆட்சியை நடத்தி வருகிறார்.

அதேபோல் அவர் நாடாளுமன்ற அவை நடவடிக்கையை செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது அவரை சபாநாயகர் அவையில் இருந்து வெளியேற்றினார். இவரது நடவடிக்கையின் மூலம், எதிரிகள் கூட நாடாளுமன்றத்திற்குள் எவ்வாறு நுழைய முடியும், எங்கிருந்து தப்பிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இவ்விவகாரம் குறித்து விசாரிக்க குழுவும் அமைக்கப்பட்டது. குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று தெருக்களில் எழுதிவைத்துவிட்டு தற்போது அவர்கள் குடித்துவிட்டு ஆட்சியை நடத்துகிறார்கள். 2019 பஞ்சாப் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, இனிமேல் மதுவை தொட மாட்டேன் என்றார். ஆனால் கடந்த 10 மாதமாக பஞ்சாப்பில் என்ன நடக்கிறது என்பதை நாடே பார்க்கிறது’ என்றார். ஹர்சிம்ரத் கவுரின் பேச்சை கேட்டு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட அனைத்து எம்பிக்களும் சிரித்தனர்.

Related Stories: