வரவேற்க திரண்ட 50 லட்சம் ரசிகர்களால் அர்ஜென்டினா வீரர்களின் பேருந்து ஊர்வலம் பாதியில் நிறுத்தம்: ஹெலிகாப்டரில் வீரர்கள் மீட்பு

பியூன்ஸ்அயர்ஸ்: கத்தாரில் நடந்த 22வது பிபா உலக கோப்பை பைனலில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 36 ஆண்டுக்கு பின் உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய மெஸ்சி தலைமையிலான வீரர்களுக்கு அர்ஜென்டினா தலைநகர் பியூன்ஸ் அயர்சில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் பியூன்ஸ் அயர்ஸில் உள்ள மத்திய ஓபிலிஸ்க் நினைவுச்சின்னத்திற்கு வீரர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.

வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் 50லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டு பஸ் செல்ல முடியாத நிலை உருவானது. ஊர்வலத்தின் சில பகுதிகளை முற்றிலுமாக தடுத்ததால், ஊர்வலப் பாதையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. சில ரசிகர்கள் பேருந்தில் ஏறி குதிக்க முயன்றனர், இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 18 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அணி வகுப்பு பேருந்து நகர முடியாதநிலை ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்து அணிவகுப்பு பாதியில் ரத்து செய்யப்பட்டு கேப்டன் மெஸ்சி உள்ளிட்ட வீரர்கள் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டனர். இதனிடையே பேருந்து ஊர்வலத்தின்போது மேலே சென்ற மின்சார வயர் வீரர்கள் மீது பட இருந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் கத்தியதை அடுத்து சுதாரித்து கொண்ட மெஸ்சி உள்ளிட்ட வீரர்கள் டக்கென்று குனிந்து கொண்டார்கள். இல்லை என்றால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

Related Stories: