கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது

சென்னை: நாவலூர் அருகே பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து, அவனிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக பள்ளிக்கரணை மது விலக்கு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படையினர் நாவலூர் அருகே பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, பேருந்தில் பயணம் செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அலேக் நாயக் (24) என்ற வாலிபரை பிடித்து சோதனையிட்டதில் பை ஒன்றில் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த நபரை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விசாரணை நடத்தியதில், நாவலூரில் அறை எடுத்து தங்கி கட்டட வேலை செய்வதாக கூறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து ஓஎம்ஆர் பகுதியில் விற்பனை செய்வதாகவும் கூறினார்.

இதையடுத்து, போலீசார் அவன் தங்கியிருந்த அறையில் சோதனையிட்டு அங்கிருந்த எடை போடு இயந்திரம் மற்றும் கஞ்சா பொட்டலங்களையும் தாழம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். தாழம்பூர் ேபாலீசார் வழக்குப் பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 126 கஞ்சா மற்றும் போதைப் பொருள் வழக்குகள் பதிவு செய்து 273 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 444 கிலோ கஞ்சா, 100 கிராம் கொக்கைன், 46 கிராம் மெத்தபட்டமைன், 105 போதை ஸ்டாம்ப், 11,783 போதை மாத்திரைகள், 546 கிராம் ெஹராயின், 890 மிலி கஞ்சா ஆயில், 4368 கிலோ குட்கா, 48 மோட்டார் சைக்கிள்கள், 5 மூன்று சக்கர வாகனங்கள், 14 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், 33 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று ஆணையரக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

Related Stories: