கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பில் புதிய சோதனை சாவடி திறப்பு

பெரம்பூர்: சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போதைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கொளத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் காவல் நிலைத்திற்குட்பட்ட ரெட்டேரி சந்திப்பில், புதிய சோதனை சாவடி நேற்று திறக்கப்பட்டது. ஏற்கனவே இந்த இடத்தில் இருந்த சோதனை சாவடி, மேம்பாலம் கட்டும் பணிக்காக அகற்றப்பட்டு பல ஆண்டுகளாக சோதனை சாவடி இல்லாத சூழ்நிலையில், மீண்டும் இந்த சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளது. இதனை இணை ஆணையர் ராஜேஸ்வரி திறந்து வைத்தார்.

கொளத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் ராஜாராம், உதவி ஆணையர்கள் சிவகுமார், ஆதிமூலம் ஆய்வாளர்கள் மூர்த்தி, லோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராஜமங்கலம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் இந்த சோதனை சாவடி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சோதனை சாவடியில் இருந்து  கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் துணை ஆணையர் ராஜாராம் தெரிவித்தார்.

Related Stories: