பெரும்பாக்கம் தரைப்பாலம் உடைந்தது: 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிப்பு

காஞ்சிபுரம்: பாலாற்று வெள்ளத்தில் பெரும்பாக்கம் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  அவதிப்பட்டு வருகின்றனர். ஆந்திர மாநில வனப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக, தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் அணையில் இருந்து நீர் அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக வாணியம்பாடி, வேலூர்  பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அணைக்கட்டில் இருந்து உபரிநீர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு 3686 கன அடியாக வெளியேற்றப்பட்டு வருவதால் இந்த  நீர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பெரும்பாக்கம் வழியாக சென்று, திருமுக்கூடல் பகுதியில் கலந்துவருகிறது. இதனால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களை இணைக்கும் பெரும்பாக்கம் தரைப்பாலம் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் வழியாக இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் மட்டுமே சென்று வந்தனர்.

இந்தநிலையில் அதிக நீர்வரத்து காரணமாக வாலாஜா அணைக்கட்டில் இருந்து கூடுதலாக 4 ஆயிரம் கன அடி நீர் நேற்று திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது.

இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம், பெரும்பாக்கத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், திருவண்ணாமலை வடஇலுப்பை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் என 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட பகுதியை சேர்ந்த மக்கள் காஞ்சிபுரம் வழியாக  30 கிமீ சுற்றிக்கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: