திருமழிசை, குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அடுத்துள்ள குத்தம்பாக்கத்தில் ரூபாய் 336 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை இன்று (17.12.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம். நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொது மக்களின் வசதிக்காகவும் புதிய பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சென்னை கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் பேருந்துகளுக்காக திருமழிசை,  குத்தம்பாக்கத்தில் தமிழ்நாடு  வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள துணைக்கோள் நகரத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 336 கோடி மதிப்பீட்டில் நான்காவது புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை இன்று (17.12.2022) அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஆவடி எஸ்.எம்.நாசர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில்  நடவடிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். இந்த ஆய்வின் போது பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப., சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப. மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: