புளியந்தோப்பில் மக்கள் மருந்தகத்தில் போதை மாத்திரைகள் விற்பனையா?: வாலிபரிடம் போலீசார் விசாரணை

பெரம்பூர்: புளியந்தோப்பில் உள்ள மக்கள் மருந்தகத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல்படி வாலிபரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மக்கள் மருந்தகம் இயங்கி வருகிறது. இதை குத்தகை உரிமம் எடுத்துள்ள பிரகாஷ் என்பவர், புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா (25) என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.

இந்தநிலையில், மக்கள் மருந்தகத்தில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள் என்று கூறி விற்பனை செய்வதாகவும் அவற்றை இளைஞர்கள் தொடர்ந்து வாங்கி செல்வதாகவும் புளியந்தோப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில், நேற்றிரவு போலீசார் கண்காணித்தபோது மருந்தகத்தில் இளைஞர்கள் சிலர் மாத்திரைகளை வாங்கினர். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் சென்று அந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து 100 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

‘’மருத்துவரின் ஒப்புதல் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை ஏன் தருகிறீர்கள்’’ என்று போலீசார் கேட்டபோது அதற்கு ஜெயசூர்யா முறையான தகவல்களை தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறைவான விலையில் மருந்துகள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இங்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: