செங்கம் அருகே நடத்தை சந்தேகத்தால் விபரீதம் மனைவி, 4 குழந்தைகள் சரமாரி வெட்டிக்கொலை: நள்ளிரவில் தூக்கத்தில் நடந்த பயங்கரம்; விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

செங்கம்: செங்கம் அருகே நடத்தை சந்தேகத்தால் கஞ்சா போதையில் மனைவி மற்றும் 4 குழந்தைகளை நள்ளிரவு தூங்கி கொண்டிருந்தபோதே சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு விவசாயியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஓரவந்தவாடி, மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). விவசாயி. இவரது மனைவி வள்ளி(37). இவர்களுக்கு முதலில் 2 பெண் குழந்தைகள் பிறந்து சில நாட்களில் இறந்து விட்டன.

ஆண் வாரிசு வேண்டும் என்று பழனி அடிக்கடி கூறி வருவாராம். ஆனால் தம்பதிக்கு சவுந்தர்யா (19), திரிஷா (15), மோனிஷா (14), பூமிகா (9), என்று அடுத்தடுத்து 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். 5 வதாக மகன் சிவசக்தி (6) பிறந்தான். இதையடுத்து தனுஸ்ரீ என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளது. இதற்கிடையே விவசாயி பழனி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டூர் கிராமத்தில், மதன்மேரி என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

அந்த நிலத்தில் உள்ள வீட்டிலேயே குடும்பத்துடன் வசித்துள்ளார். மூத்த மகள் சவுந்தர்யாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து, கணவர் வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில் பழனிக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம். மேலும் அவருக்கு குடிப்பழக்கத்துடன் கஞ்சா புகைக்கும் பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. கடன் பிரச்னையும் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கஞ்சா போதையில் வீட்டிற்கு சென்ற பழனி, குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு தூங்கச்சென்றுள்ளார்.

நேற்று அதிகாலை வள்ளியின் தாய் ஜானகி, மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்க்க வந்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, முதல் அறையில் பழனி தூக்கில் சடலமாக தொங்குவது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஜானகி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். மற்றவர்களை தேடியபோது, ஒரே அறையில் மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, தனுஸ்ரீ, மகன் சிவசக்தி ஆகிய 5 பேரும் கழுத்து மற்றும் தலையில் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

சிறுமி பூமிகா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டனர். வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் வந்து 6 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பழனிக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது  நேற்று முன்தினம் இரவும் போதையில் வந்த பழனி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பிறகு, உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச்சென்றுள்ளார். நள்ளிரவு தூக்கத்தில் இருந்து வெறிபிடித்தபடி எழுந்த பழனி, தூங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை கத்தி, கொடுவாள், அருவாமனை மற்றும் கோடாரியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்ததால் யாருடைய அலறல் சத்தமும் கேட்கவில்லை. இதையடுத்து, அங்குள்ள அறைக்குள் சென்று, பழனியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக  திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, வீட்டில் ரத்தகறையுடன் கிடந்த கொடுவாள், கத்தி, அருவாமனை உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும்  பழனி, மனைவி வள்ளி ஆகியோரது  2 செல்போன்களையும் விசாரணைக்காக போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மற்றும் குழந்தைகள் என்று 5 பேரை வெட்டிக்கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

* மாந்திரீக கயிறு கட்டிவந்த பழனி

பழனி, கடந்த ஒரு வாரமாக பேய் பிடித்தவர்போல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு மாந்திரீகத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளதாம், இதனால் மனைவியுடன் செங்கம் அருகே உள்ள ஒரு மந்திரவாதியிடம் சென்று மந்திரித்து கொடுத்த கயிற்றை கையில் கட்டிக்கொண்டு இருந்தாராம்.

Related Stories: