கார்த்திகை கடைசி சோமவாரத் திருவிழா கொண்டாட்டம்: பட்டுக்கோட்டை அருகே கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொது ஆவுடையார் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை சோமாவாரத் திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து வழிபட்டு மகிழ்ந்தனர். தென் சிதம்பரம் என்று அழைக்கப்படும் பரக்கலக்கோட்டையில் அமைந்துள்ளது பொது ஆவுடையார் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த  கோவிலில் கார்த்திகை கடைசி சோமவாரத் திருவிழா வெகு விமர்சையுடன் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விழாவை காண சுற்றுவட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.

நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு பொது ஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.  அப்போது பக்தர்கள் ஆவுடையாரே என்று முழக்கமிட்டு வணங்கினர். பொது ஆவுடையாருக்கு நெல், ஆடு, கோழி, இளநீர், நவதானியங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். அவற்றில் நெல், இளநீர் மலை போல் குவிந்தது. இவை அனைத்துமே பொது ஏலத்தில் விடப்படும். பட்டுக்கோட்டை டி.எஸ்.பி பிரிதிவிராஜ் சௌகான் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாததாக இந்த கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: