மக்களவையில் எந்தவொரு எம்பி.யின் சாதி, மதத்தை குறிப்பிட்டு பேச கூடாது: சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை

புதுடெல்லி: ``மக்களவையில் எந்தவொரு எம்பி.யின் சாதி, மதத்தை குறிப்பிட்டு பேச கூடாது. மீறும் எம்பி. மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடக்கும் இந்த கூட்டத்தில் 16 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரம், வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், 4வது நாளான நேற்று அவை கூடியதும் கேள்வி நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ஏஆர். ரெட்டி, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாக கூறி, பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததாக அரைகுறையாக தனக்கு தெரிந்த இந்தியில் கூறினார். மேலும் சபாநாயகர் ஓம் பிர்லா இது குறித்து கருத்து தெரிவிக்க முன்வந்த போது, ``நான்தான் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கேனே. குறுக்கிடாதீங்க,’’ என்று ரெட்டி கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், `` காங்கிரஸ் எம்பி. அரைகுறை இந்தியில் பேசியதால், அதே போல் அரைகுறை இந்தியில்தான் பதிலளிப்பேன்,’’ என்று கூறினார்.

தான் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் என்பதால் அமைச்சர் தன்னை விமர்சிப்பதாக ஏ.ஆர்.ரெட்டி குற்றம்சாட்டினார். பின்னர் பேசிய சபாநாயகர், ``மக்கள் எம்பி.க்களின் சாதி, மதத்தை பார்த்து தேர்ந்தெடுப்பதில்லை. அவையில் எந்தவொரு எம்பி.யின் சாதி, மதத்தையும் குறிப்பிட்டு உறுப்பினர்கள் பேச கூடாது. மீறும் எம்பி. மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று கூறினார்.  மேலும், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியிடம், ``நீங்கள் கட்சியின் அவை தலைவர். இனிமேல் சபாநாயகரிடம் பேசும் போது ‘’குறுக்கிடாதீர்கள்’’ என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்பதை உங்கள் கட்சி எம்பி.க்களுக்கு புரிய வையுங்கள்,’’ என்று கடிந்து கொண்டார்.

Related Stories: