முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்த நடவடிக்கை: இமாச்சலின் புதிய முதல்வர் அதிரடி

சிம்லா: ‘தேர்தல் வாக்குறுதிகளை முதல் அமைச்சரவை கூட்டத்தில் இருந்தே செயல்படுத்த தொடங்குவோம்’ என இமாச்சலின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற சுக்வீந்தர் சிங் சுக்கு கூறி உள்ளார். இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதைத் தொடர்ந்து, அம்மாநில புதிய முதல்வராக சுக்வீந்தர் சிங் சுக்குவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்திரியும் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், முதல்வர் சுக்வீந்தர் சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தலுக்கு முன்பாக நாங்கள் அளித்த வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க இளைஞர்களுக்கு ரூ.680 கோடி முதலீட்டு நிதி, 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதி உதவி, 300 யூனிட் இலவச மின்சாரம் போன்றவை முதல் அமைச்சரவை கூட்டத்தில் இருந்தே செயல்படுத்த தொடங்குவோம்.

குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு செய்யப்படும். துளி அளவும் ஊழலுக்கு இடம் தராமல் இருக்க வெளிப்படைத்தன்மை சட்டம் கொண்டு வரப்படும். இச்சட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களின் சொத்துக்கள் மற்றும் வருமான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக கட்சி மேலிடத்துடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அனைத்து பிரிவினரின் கலவையாக 10 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: