ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி அடையாள எண்: மெகபூபா கடும் எதிர்ப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக ‘குடும்ப ஐடி’ எனும் அடையாள எண் வழங்கும் பரிந்துரைக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு பிற மாநிலங்களைப் போல ஒன்றிய அரசின் அனைத்து நலத்திட்டப் பலன்களும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு வசதியாக பயனாளிகளை எளிதில் கண்டறிய, காஷ்மீர் முழுவதும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரத்யேக அடையாள எண் வழங்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

எழுத்து-எண் கொண்ட இந்த அடையாள எண் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ‘குடும்ப ஐடி’யாக இருக்கும். இந்த பரிந்துரையை பாஜ வரவேற்றுள்ளது. அதே சமயம் தனிநபர் தகவல் பாதுகாப்பு கவலையை முன்வைத்து பிற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்நிலையில், முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று தனது டிவிட்டரில், ‘‘குடும்ப ஐடி உருவாக்கப்படுவது, 2019ம் ஆண்டுக்குப் பிறகு காஷ்மீர் மக்கள் மீதான அதிகரித்து வரும் நம்பிக்கை குறைவின் அடையாளமாகும். காஷ்மீர் மக்களை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அவர்களை இரும்புப் பிடியால் இன்னும் இறுக்கி கண்காணிக்கும் மற்றொரு கண்காணிப்பு தந்திரம்தான் இது’’ என கூறி உள்ளார்.

Related Stories: