இமாச்சல் முதல்வராக சுக்வீந்தர் பதவியேற்பு; கார்கே, ராகுல், பிரியங்கா நேரில் வாழ்த்து

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தின் 15வது முதல்வராக சுக்வீந்தர் சிங் சுகு நேற்று பதவியேற்றார். இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இமாச்சல் பிரதேச சட்டமன்ற  தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில் பதிவான வாக்குகள்  8ம் தேதி எண்ணப்பட்டன.  இமாச்சலில்  1985ம் ஆண்டு முதல் ஆட்சி மாற்றம் என்பது வழக்கமாகி விட்டது. அதன்படி இந்த தேர்தலிலும் ஆளும் கட்சியாக இருந்த பாஜ தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. புதிதாக தேர்வு பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் நேற்று முன்தினம் சிம்லாவில்  நடந்தது.

இதில், முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்வீந்தர் சிங் சுகு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து, தலைநகர் சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் நேற்று காலை பதவி ஏற்பு விழா நடந்தது.  மாநில முதல்வராக சுக்வீந்தர் சிங் சுகுவும், துணை முதல்வராக முகேஷ் அக்னி கோத்ரியும் பதவியேற்றனர். ஆளுனர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி எம்பி, பிரியங்கா காந்தி, சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்,ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்று முதல்வர் சுக்வீந்தர் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: