ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் சந்திர விண்கலம் ஏவப்பட்டது

கேப் கனாவெரல்: ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் சந்திர விண்கலம் ஜப்பானின் ஐஸ்பேஸ் நிறுவனத்தின் மூலம் சந்திரனுக்கு ஏவப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உருவாக்கிய முதல் சந்திர விண்கலம் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. துபாயின் முன்னாள் ஆட்சியாளர் மறைந்த ஷேக் ரஷீத் அல் சயீத்தின் நினைவாக ரஷித் ரோவர் பெயரிடப்பட்ட இந்த சந்திர விண்கலம் யுஏஇ.யினால் துபாயில் உள்ள முகமது பின் ரஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டது. இதனை கட்டமைக்கும் பணி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியது.

இது ஜப்பானில் உள்ள தனியார் நிலவு ஆய்வு நிறுவனமான ஐஸ்பேஸால் வடிவமைக்கப்பட்ட ஹகுடோ-ஆர் லேண்டர் மூலம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம்  நிலவில் தரையிறங்க உள்ளது.  அங்கு அது ஒரு நிலவு நாள் (அதாவது பூமியில் 14.75 நாட்களுக்கு சமம்) இருந்து மாதிரிகளை சேகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கலம் நிலவின் இரவை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  குறைந்த எரிபொருள் செலவில் அதிக மாதிரிகளை சேகரிக்கும் வகையில் கூடுதல் இடவசதியுடன் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலவு லட்சிய ஆய்வுத் திட்டம் செயல் வடிவம் பெற்றுள்ளது.

Related Stories: