கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 12 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து சபரிமலையில் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று தொடங்கிய பக்தர்கள் வருகை இன்றும் தொடர்ந்து நீடிக்கிறது. நேற்று 10 மணி நேரத்திற்கு மேலும், இன்று 12 மணிநேரத்திற்கு அதிகமாகவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 18 நாட்களே உள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் இரண்டே கால் லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.

அதன்படி நேற்று மட்டும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து நேற்றும், இன்றும் சபரிமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாகவே காட்சி அளித்தது. நேற்று பக்தர்கள் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே இன்று இதுவரை சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்து உள்ளனர். இந்த மண்டல சீசனில் இதுதான் மிகவும் அதிகபட்சமான எண்ணிக்கையாகும். இதனால் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்களின் வரிசை 2 கிமீ தூரத்தையும் தாண்டி காணப்பட்டது.

இன்று 18ம் படி ஏறுவதற்காக பக்தர்கள் 12 மணிநேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை நடை திறந்த ஒரு மணி நேரத்திலேயே சுமார் 16 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 2 நாட்களிலும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 12ம் தேதியும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு செய்து உள்ளனர்.

Related Stories: