பண மதிப்பிழப்பு விவகாரம் ஆவணங்கள் தாக்கல் செய்ய அரசு, ரிசர்வ் வங்கிக்கு 2 நாள் கெடு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு விவகாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் வரும் 10ம் தேதிக்குள் ஆவணங்களாக தாக்கல் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு மற்றும் ஆர்.பி.ஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு திடீரென நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.   இந்த நிலையில் பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை 2016 நவம்பர் 15ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், எ.எஸ்.போபண்ணா, ராமசுப்பிரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பணமதிப்பிழப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு அறிவித்தது தவறான முடிவு. இத்தகைய முடிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தாக வேண்டும். இந்த உத்தரவால் நாட்டின் அனைத்து குடிமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்என மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம் வாதிட்டார். அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யக்கூடாது.

இந்த விவகாரத்தில் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னர் தான் முடிவெடுக்கப்பட்டது. இதில் தடை விதிக்கப்பட்டால் முந்தைய காலத்திற்கு செல்லும் சூழல் ஏற்படும். அதனால் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம் என தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததோடு, பணமதிப்பிழப்பு விவகாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஆவணங்களாக ஒன்றிய அரசு, ஆர்.பி.ஐ ஆகியவை வரும் 10ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதேப்போன்று மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் அனைவரும் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories: