திருவொற்றியூர் குடோனில் இரும்பு கம்பி திருடிய 3 பேர் பிடிபட்டனர்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் உள்ள இரும்பு குடோனில், இரும்பு கம்பி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவொற்றியூர் அருகே சாத்தங்காடு பகுதியில் தமிழக அரசின் இரும்பு மார்க்கெட் உள்ளது. இங்கு, ஏராளமானோர் வாடகைக்கு குடோன் எடுத்து அதில் இரும்பு கம்பிகளை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று சாத்தாங்காடு போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 பேர் கட்டிடத்திற்கு பயன்படுத்தக்கூடிய இரும்பு கம்பிகளை காஸ் கட்டிங் மூலம் துண்டுதுண்டாக வெட்டி சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து, அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனால் அவர்களை மடக்கிப் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், புழல் பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் (54), திருவொற்றியூர் எஸ்எம் நகர் பகுதியை சேர்ந்த அபின் (27), மகேஷ்வரன் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து, இரும்பு மார்க்கெட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்றில், இரும்புகளை திருடி அதனை புதருக்குள் மறைத்து வைத்து, பின்னர் அதை துண்டுதுண்டாக வெட்டி சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று விற்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து,  3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, சுமார் 2 டன் எடையுள்ள இரும்பு கம்பி மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: