தமிழக- கர்நாடக எல்லையில் ஈரோடு வனத்துறை, வேட்டை கும்பல் இடையே கடும் துப்பாக்கி சண்டை: ஒருவர் கைது

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் பர்கூர் அடுத்த சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலாறு பீட், வாளாங்குழிப் பள்ளத்தில் துப்பாக்கியுடன் சிலர் நுழைந்துள்ளதாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரகர் ராஜா தலைமையில் வனக்காப்பாளர்கள்  மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என 9 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கிய கும்பலை சரணடையும்படி வனத்துறையினர் எச்சரித்தனர். ஆனால், கும்பல் வனத்துறையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு வனத்துறையினர் பதிலடி கொடுத்ததால் பாறையின் பின்புறம் சென்று தப்பினர்.

பின்னர் அவர்களை எச்சரிக்கும் வகையில் வனத்துறையினர் துப்பாக்கியால் தரையை நோக்கி சுட்டனர். இதனால் கும்பல் தப்பி ஓடியது. அதில் ஒருவரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் கோவிந்தபாடியை சேர்ந்த குமார் (40) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், தப்பியவர்கள் கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா (எ) காரவடையான், காமராஜ், செட்டிபட்டியைச் சேர்ந்த பச்சைக் கண்ணன், தர்மபுரி மாவட்டம் ஆத்து மேட்டூரை  சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் 2 நாட்டு துப்பாக்கிகளுடன் மான் வேட்டைக்கு சென்றதும் தெரியவந்தது. கும்பல் மறைத்து வைத்திருந்த மான் கறி, பால்ரஸ் குண்டுகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.  வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: