காரில் பள்ளி மாணவன் கடத்தல்: மரக்காணம் அருகே பரபரப்பு

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட அழகன்குப்பம் மீனவர் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (32). இவரது மகன் டிஜேஸ் (7). இவர் அப்பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் நவநீதகிருஷ்ணன் தனது மகனை பள்ளியில் விட்டுவிட்டு வந்துள்ளார். மீண்டும் மாலை  தனது மகனை வீட்டிற்கு அழைத்து வர பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது பள்ளி வளாகத்தில் அவரது மகனை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் விசாரித்தும் பார்த்துள்ளனர். ஆனால் அவரது மகனைப்பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் தனது மகனை யாராவது கடத்திச்சென்றிருக்கலாம் என்று கருதிய நவநீதகிருஷ்ணன் மரக்காணம் காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்தார். போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், மீனவர் நவநீதகிருஷ்ணனுக்கும், அவரது மனைவி சுஷ்மிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து செய்துள்ளனர். இதனால் மாணவனை அவரது தாய் சுஷ்மிதாவின் உறவினர்கள் யாராவது கடத்திச் சென்று இருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஆரஞ்சு நிற கார் ஒன்றில் மாணவன் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மரக்காணம் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். மாணவனையும், அவனை கடத்திச்சென்ற மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: