ஊட்டி தனியார் பூங்காவில் பூத்துள்ள குறிஞ்சி மலர்-சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டி தனியார் பூங்காவில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து வருகிறார்கள்.

குறிஞ்சிச்  செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது  அவற்றின் தாவரவியல் பெயர் ஆகும். இந்தக் குறிஞ்சி மலர் குடும்பத்தில் 200  வகைச் செடிகள் உள்ளன. இனை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே  காணப்படுகின்றன. அவற்றிலும் 150 வகைகள் வரையில் மேற்கு தொடர்ச்சி மலைகள்,  நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன.

நீலக்குறிஞ்சி  மலர்ச் செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல்  60 செ.மீ. வரையில் இருக்கும். பிரகாசமான அதன் ஊதாபூக்கள் கோயில் மணிகளின்  உருவம் கொண்டவை. இதில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பூக்கும்  குறிஞ்சி மலர்கள் முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர்கள்  காணப்படுகிறது. இதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி  மலர்களே சிறப்பானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில்  2017ம் ஆண்டு ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி மலைப்பகுதிகளில் அதிகளவு இந்த  குறிஞ்சி மலர்கள் பூத்துக் காணப்பட்டது. இதனை காண உள்ளூர் மக்கள் மற்றும்  சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா  எடுக்கப்பட்டது. அதன்பின், நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு குறிஞ்சி மலர்கள்  பூக்கவில்லை.

எனினும், அங்காங்கே ஒரு சில செடிகளில் மட்டும் குறிஞ்சி  மலர்கள் பூத்துக் காணப்பட்டன. குறிப்பாக, தொட்டபெட்டா மலைச்சரிவுகள்,  தும்மனட்டி செல்லும் சாலையோரங்களில் இந்த மலர்கள் செடிகள் காணப்பட்டன. இதனை  சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து சென்றனர்.

இந்நிலையில், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பூங்காவில் தற்போது மூன்று  ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. தொட்டிகளில்  வைக்கப்பட்ட போதிலும், இச்செடிகளில் அதிகளவு குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.  இதனை தற்போது சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் கண்டு  ரசித்து செல்கின்றனர்.

Related Stories: