சின்னமனூர் அருகே பலத்த சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகள்-சீரமைக்க மக்கள் கோரிக்கை

சின்னமனூர் : சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் பலத்த சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்கள் கோரியுள்ளனர்.

சின்னமனூர் அருகே போடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அய்யம்பட்டி கிராம ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் மற்றும் முல்லைப் பெரியாற்றின் பாசனத்தின் கீழ் விவசாயமே பிரதானமாக உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.

இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக பழைய காலனி என்ற பகுதி உருவாக்கப்பட்டது. இங்கு 30க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இவற்றில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வடக்கு திசையில் புதியதாக மற்றொரு காலனி உருவாக்கப்பட்டு அங்கும் 20 வீடுகளுக்கு மேல் கட்டப்பட்டு அவற்றிலும் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களில் பெய்த தென்மேற்கு பருவமழையால் பழைய காலனியில் உள்ள ஏழு வீடுகள் பலத்த சேதமடைந்தன. அதில் மூன்று வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் வீடுகளில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர்தப்பினர்.

அத்துடன் மேலும் நான்கு வீடுகளின் சுவர்களில் விரிசல் விழுந்துள்ளதால் அவை எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம் என்ற நிலை தொடர்கிறது. இவை தவிர மீதமுள்ள வீடுகளிலும் மேற்கூரைகள் முழுவதும் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதுடன், வெளிப்பகுதியும் தற்போது தொடரும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வீடுகளில் மக்கள் வேறு வழியின்றி வசித்து வருகின்றனர்.

இதற்கிடையில் 2004ல் கட்டப்பட்ட புதிய காலனியில் இருக்கும் 20 வீடுகளில் 2 வீடுகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த காலனி வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று அவற்றில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இதற்கிடையே தற்போதும் இப்பகுதிகளில் மழை தொடர்ந்து வருகிறது.

இதனால் வீடுகள் மேலும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்துள்ள வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றை சீரமைக்கம் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: