தொடரும் கேரள கெடுபிடிகளால் அதிரடி முடிவு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கண்ணகி கோயில்-வனப்பாதையை தமிழக அதிகாரிகள் ஆய்வு

கூடலூர் : கேரள அரசின் தொடர் கெடுபிடிகளைத் தொட ர்ந்து, கண்ணகி கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதையடுத்து வனப்பாதையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சேரன் செங்குட்டுவனால் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கண்ணகி கோயில், தேனி மாவட்டம் கூடலூருக்கு தெற்கேயுள்ள வண்ணாத்திப்பாறையில் அமைந்துள்ளது. தமிழக - கேரள எல்லைப்பகுதியில் உள்ள மங்கலதேவி மலையில் 4,830 அடி உயரத்தில் இந்த கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலை கேரள மாநிலமும் சொந்தம் கொண்டாடுகிறது.

கேரள வனப்பாதை வழியாக இக்கோயிலுக்கு செல்ல ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் கேரள அரசு அனுமதியளித்து கெடுபிடி காட்டுகிறது. கோயிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.இதையடுத்து கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வர அதனை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். மேலும் தமிழக வனப்பகுதியான பளியன்குடி வழியாக கோயிலுக்கு செல்ல சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கண்ணகி கோயில் தொடர்பான நீண்டநாள் பிரச்னைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது.

 

கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதில், ‘‘தமிழக எல்லையில் வண்ணாத்திப்பாறை மலையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஆட்சேபணை எதுவும் இருப்பின் தேனி, பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பான நோட்டீஸ், கூடலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆய்வு: கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு செல்லும் பளியங்குடி மற்றும் தெல்லுகுடி வனப்பாதைகளை தமிழக இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், கம்பம் காசி விஸ்வநாத பெருமாள் கோயில் நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் உடன் இருந்தனர். அறக்கட்டளை சார்பில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: